சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 8 வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் முன்பு விசாரணை நடந்தது. அதில், ரோடு ஷோக்கள் மற்றும் அரசியல் பிரச்சாரங்களுக்கு விதிமுறைகள் வகுப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அமர்வு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் பின்வருமாறு:
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரிய மனு
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு
பிரச்சாரக் கூட்டங்களில் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதை எதிர்த்து தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு
மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை கோரி கார்த்தீபன் தாக்கல் செய்த மனு
அரசியல் பிரச்சாரங்களில் டிரோன் கேமரா கண்காணிப்பு, தீவிபத்து தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி பாஜகவின் சென்னை மாநகர கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனு — இது விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது.
கரூர் நெரிசல் விபத்து தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று ஒரே நாளில் விசாரணைக்கு வருவதால், நீதிமன்றம் வழங்கும் தீர்மானங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

















