கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. குழுவினர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த குழுவில் உறுப்பினராக இருந்த பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தது. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, இதற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும். சம்பவம் நிகழ வழிவகுத்த காரணங்கள் என்ன? நிகழ்வுக்கு முன் மற்றும் பின் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்ட காரணங்கள் என்ன? எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் தடுக்க அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பதை அறிக்கை மூலம் விளக்க வேண்டும்.
மேலும், இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதா? அது பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இந்த அவசரமான விஷயத்தில் உங்கள் தகுந்த பதிலை எதிர்பார்க்கிறேன்,” என அனுராக் தாக்கூர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.