கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆய்வு நடத்தினர்.
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான 12 பேர் கொண்ட சிபிஐ குழு, 3டி லேசர் ஸ்கேனர், அளவீட்டு கருவிகள், கேமரா உள்ளிட்ட உயர் நவீன சாதனங்களுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தது. அவர்களுடன் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான உள்ளூர் போலீசாரும் இணைந்து பணியாற்றினர்.
அக்டோபர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், இதில் குழந்தைகள், பெண்களும் அடங்குவர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவின் கீழ் சிபிஐ விசாரணையில் உள்ளது.
சிபிஐ அதிகாரிகள் கடந்த 16ஆம் தேதி கரூருக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நேற்று கரூர் வந்து, எஸ்ஐடி குழுவிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை மீளாய்வு செய்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பலரை சாட்சியங்களுக்காக நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், வேலுசாமிபுரம் டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர், போட்டோகிராஃபர் உள்ளிட்ட நான்கு பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம் சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை மற்றும் சாட்சியங்கள் தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்டமாக சாட்சியங்களை நேரில் ஆய்வு செய்து, சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
