கரூர் விபத்து வழக்கில் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தளபதி விஜய்யை சந்தித்து பேசினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கட்சி நிர்வாகிகளான மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் சென்றது. விசாரணைக்கு சிபிஐ ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதியழகன் மற்றும் பவுன்ராஜ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மதியழகன், சிறையில் நடந்த அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்துகொண்டதாகத் தகவல். அதை கேட்ட விஜய், மதியழகனையும் பவுன்ராஜையும் கட்டியணைத்து ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
விஜய், “எதையும் அமைதியாக சமாளிப்போம். உண்மை வெளிவரும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக இருங்கள். அவர்களுக்கு தேவையான உதவி குறித்து என்னிடம் கூறுங்கள்,” என்று உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் விரைவில் கரூர் வருவதாகவும் கூறியுள்ளார்.
சந்திப்பு முடிவில் விஜய் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும், அதனைத் தாங்க முடியாமல் மதியழகனும் குடும்பத்தினரும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் தெரிகிறது.
 
			














