கரூரில் நடந்த கூட்ட நெரிசல் பேரவலத்தில் 41 உயிரிழந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்களை பரப்பாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது :
“கரூரில் நிகழ்ந்த துயரம் இதுவரை இல்லாத கொடூரமான ஒன்று. மருத்துவமனையில் நேரில் பார்த்த காட்சிகள் இன்னும் மனதில் பதிந்திருக்கின்றன. சம்பவம் நடந்த உடனேயே கரூருக்கு சென்று நிலைமையை பார்வையிட்டேன். பெண்கள், குழந்தைகள் உட்பட 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறோம். காயமடைந்த அனைவருக்கும் முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.”
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்:
“சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அடுத்த முடிவுகளை எடுக்கும். இனி இப்படியான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் விதிமுறைகள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புகளுடன் ஆலோசித்து வகுக்கப்படும்.”
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்த முதல்வர், “அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிப்பட்ட வேறுபாடுகள் அனைத்தையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, மனித உயிர்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழகம் எப்போதும் நாட்டிற்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளது. இப்படியான துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.