கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதியை சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை சமூக வலைதளத்தில் குறை கூறியதாக, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், அரசியல் காரணத்தால் தன்னை குறிவைத்து வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி, வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணங்களால் ஜாமீன் வழங்குமாறு வரதராஜன் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே. ராஜசேகர், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோக்களை நீக்கி, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
