சென்னை :
அரசியல் கூட்டங்களில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் “TVK.. TVK..” என முழங்குவது தற்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் வழக்கமான காட்சியாக மாறியுள்ளது. இவ்வழக்கம் தற்போது திமுக எம்பி கனிமொழி முன்னிலையில் நடந்தபோது, அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெகத்தின் கூட்டங்கள் மட்டுமின்றி, பிற கட்சிகளின் நிகழ்வுகளிலும் தவெக நிர்வாகிகள் “TVK.. TVK..” என முழங்குவது வழக்கமாகியுள்ளது. குறிப்பாக திமுக நிகழ்வுகளிலும், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொது இடங்களிலும் இம்முழக்கம் ஒலிக்கிறது. பல நேரங்களில் கேமராவுக்காகவே சாலையோரம் நின்று முழக்கம் எழுப்பும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.
சமீபத்தில் பிரபல யூடியூபர் IShowSpeed இந்தியாவில் வந்தபோது, சில தவெக ஆதரவாளர்கள் “TVK.. TVK..” என முழங்கினர். அதற்கு “அது என்ன அர்த்தம்?” என Speed கேட்டபோது, “விஜய்.. விஜய்.. சிஎம் ஆஃப் இந்தியா!” என பதிலளித்த காட்சி நெட்டிசன்களை சிரிக்க வைத்தது.
இதேபோல், நேற்று திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் பின், வெளியில் காத்திருந்த இரண்டு தவெக நிர்வாகிகள் “TVK.. TVK..” என முழங்கினர். முதலில் அதை புறக்கணித்த கனிமொழி, அவர்கள் மீண்டும் கத்தியதும் நகைச்சுவையாக,
“இங்கே வாருங்கள்… ஏன் இப்படி கத்துறீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்,” என்று கேட்டார்.
அவர் எதிர்பாராதவிதமாக உரையாடல் தொடங்கியதும், அந்த நிர்வாகிகள் அமைதியாகி, என்ன பேசுவது என்று குழம்பினர். இதைக் கண்டு கனிமொழி சிரித்தபடி, “வாங்க, explain பண்ணுங்க… ஆனா உங்களால முடிஞ்சா தான்!” என்றபடி பதிலடி கொடுத்தார்.
அந்த தருணத்தில் எதுவும் பேச முடியாமல் தவெக நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, “கனிமொழியின் குளிர்ந்த பதிலடி!” என்ற தலைப்பில் தற்போது வைரலாகிறது.
