தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ரேக்ளா பந்தயத்திற்குப் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்கள் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன. அழிந்து வரும் நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்கவும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறைக்கு உணர்த்தவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ரேக்ளா பந்தயத்திற்காக, காங்கயம் இன காளைகளுக்குத் தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் போன்ற பகுதிகளில் ரேக்ளா பந்தயம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சில சட்டச் சிக்கல்களால் இந்தப் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோது, தடையை மீறிப் போராட்ட வடிவில் சில இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அரசு அனுமதி அளித்துள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்விதத் தடையுமின்றி கொங்குப் பகுதிகளில் ரேக்ளா பந்தயங்கள் கோலாகலமாக அரங்கேறி வருகின்றன.
வரும் ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் பல்வேறு கட்டங்களாக ரேக்ளா பந்தயங்களை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, குறிப்பாகக் காங்கயம் இன காளைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதிகாலை வேளையில் சாலையோரங்களில் மாடுகளை வண்டியில் பூட்டி, குறிப்பிட்ட தூரத்தைக் குறைந்த நேரத்தில் கடக்கும் வகையில் வேகப் பயிற்சிகள் (Sprinting) அளிக்கப்படுகின்றன. பந்தயத் தூரத்தை மின்னல் வேகத்தில் கடக்கக் காளைகளின் கால்கள் பலம்பெற மணல் பரப்பிலும் ஓட்டப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்துக் காளைகளைத் தயார்படுத்தும் விவசாயிகள் கூறுகையில், “பொள்ளாச்சி மட்டுமின்றி உடுமலை, தாராபுரம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வீரர்கள் இந்தப் பந்தயங்களில் பங்கேற்பார்கள். காங்கயம் இன காளைகள் என்பவை தமிழர்களின் சொத்து. அந்த இனத்தை அழியாமல் காப்பதே எங்களின் முக்கிய நோக்கம். தற்போது தடையற்ற சூழல் இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டாட்டமாக மாற்றப் போகிறோம். இதற்காக எங்களின் காளைகள் பந்தயக் களத்தில் வெற்றி வாகை சூடத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன” என உற்சாகத்துடன் தெரிவித்தனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் எனப் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படவுள்ள இந்தப் பந்தயங்களைக் காண இப்போதே சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

















