மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், ராஜ்யசபா உறுப்பினராக இன்று (ஜூலை 25) பதவியேற்றார். பதவியேற்பின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்டில் அவர் மேற்கொள்ள உள்ள செயல்பாடுகள் குறித்தும், தனது அரசியல் நோக்கங்களையும் தெளிவுபடுத்தினார்.
“நான் வெறும் விமர்சகராக அல்ல, இந்தியா என்ற தேசத்துக்கு என் பங்களிப்பை செலுத்த வந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களை காரணத்தோடு எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய விஷயங்களை உறுதியோடு ஆதரிப்பேன். ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் ஆக்கபூர்வமாக சொல்வேன்,” எனக் கமல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது :
“மனமார்ந்த பணிவுடனும், மனசாட்சியுடனும் பதவியேற்றுள்ளேன். அரசியலமைப்பை ஒரு சடங்காக அல்ல, அதன் ஆன்மாவுக்கு விசுவாசமாக சேவை செய்வதாக உறுதியளிக்கிறேன். இது எனது தனிப்பட்ட தருணம் மட்டுமல்ல. அதிகார அறைகளுக்குள் நான் குரல் கொடுக்கும் மக்களுடனும் இதை பகிர்கிறேன்.”
“பொது நன்மைக்காக பேசுவேன்”
“நான் ஒரு சமூகத்தின் சார்பில் அல்ல, பொதுநலனுக்காகப் பேசுவேன். குறுகிய ஆதாயத்திற்காக அல்ல, தேசிய வளர்ச்சிக்காகச் செயல்படுவேன். என்னை நம்பிய மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பயபக்தியுடனும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடனும், என் மக்கள் மீது அன்புடனும் இந்தப் பயணத்தை தொடங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.”பொது நன்மைக்காக பேசுவேன்”
தமிழகத்தின் குரலாக பார்லிமென்டில் கமல்
இந்தியாவின் மிகப்பெரிய இளைய மக்கள்தொகை மற்றும் வளமான எதிர்காலம் குறித்து பேசும் அவர், சமத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி, நெறிமுறை நிர்வாகம் போன்ற துறைகளில் அதிகாரம் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
பார்லிமென்டில் தற்போது கமல் ஹாசன் வகிக்க இருக்கும் பங்கு, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய அத்தியாயமாகவும், தமிழகத்தின் சுயகுரலாகவும் பார்க்கப்படுகிறது.