சென்னை :
மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்துவந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக உறுப்பினர்கள் பி.வில்சன், கா.சண்முகம், அப்துல்லா, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் இன்று (ஜூலை 24) நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து காலியாகும் 6 இடங்களுக்கு கடந்த ஜூலை 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, மநீம சார்பில் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நாளை மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லிக்குச் செல்கின்றதற்கான முன் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வரவில்லை. என்னை வாழ்த்தி அனுப்பவுமே வந்திருப்பதாக நினைக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன், மக்களின் வாழ்த்துகளுடனும் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன்.
இது எனக்கு இந்தியனாகக் கிடைத்த மரியாதை மட்டுமல்ல, கடமையாகவும் பார்க்கிறேன். எனது கன்னிப் பேச்சு எதை மையமாகக் கொண்டிருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. சில விஷயங்களை இங்கு பேசக் கூடாது; அங்கு பேசவேண்டும். அங்கு பேசுவதையும் இங்கு பேசக் கூடாது. எனது ஆறாண்டு பயணத்தைப் பார்த்தால், என் நோக்கம் என்ன என்பது தெரியும்,” என்றார்.
கமல்ஹாசன் எம்.பியாக தனது பயணத்தை தொடங்கும் இந்தச் சூழ்நிலையில், அவரின் அரசியல் பாணியும், பார்லிமென்ட் உரையும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளன.