சென்னை: தெருநாய்கள் பிரச்னை குறித்து பேசுபவர்கள், மனிதர்களுக்காக பொதி சுமந்த கழுதைகள் காணாமல் போனபோது அதைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய கமல்ஹாசன், “துபாயில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெறச் செல்கிறேன். நான் நடித்துள்ள தெலுங்கு படத்துக்காக அந்த விருது வழங்கப்படுகிறது” என்று கூறினார்.
பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறு பரப்பப்பட்டதாக எழுந்துள்ள விவகாரத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது, கமல்ஹாசன், “யாரையும் அவமானப்படுத்தும் வகையில் பேச வேண்டிய அவசியமே இல்லை” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தெருநாய்கள் பிரச்னை, விலங்குகள் பாதுகாப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், “இதற்கான தீர்வு மிக எளிமையானது. விஷயம் தெரிந்தவர்கள், உலக வரலாறு தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்பதை உணர்ந்தவர்கள் கேள்வி எழுப்புவார்கள் – கழுதை எங்கே காணாமல் போனது? மனிதர்களுக்காக சுமை சுமந்த அந்தக் கழுதைகள் மறைந்துவிட்டன. ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கருத்து” என்று வலியுறுத்தினார்.
மேலும், “ஒருவர் நல்லது செய்கிறார் என்றால் அவர் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியைப் பார்ப்பது இல்லை, நாட்டிற்கு நல்லது என்றால் அதையே ஆதரிக்க வேண்டும்” என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.