டிட்வா புயல் காவேரி டெல்டா மாவட்டத்தை அடைந்து 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலையில் மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மாவட்டத்தில் சராசரியாக 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோவிலில் அதிகபட்சமாக 17 செண்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா காளியப்பநல்லூர் ஊராட்சி என்.என். சாவடியில் தாழ்வான பகுதிகளில் தெருக்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் வடிய வழியின்றி தண்ணீர் தேங்கியுள்ளது. புது தெரு, அம்பேத்கார் நகர், ரத்தினம் தெரு, சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளது. புதுத்தெருவில் சகாயராணி என்ற பெண் வீட்டில் புகுந்த தண்ணீரை மூன்று நாட்களாக இறைத்து வருகிறார். வீட்டினுள் பாம்பு வந்ததால் உறவினர் வீட்டில் இரவு நேரத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பகுதியில் வடிகால் முறையாக இல்லாததால் வருடம் தோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாகவும், பாதிப்பை பார்த்து செல்லும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் தற்போது வரை அதிகாரிகள் ஒருவரும் வரவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.















