தேனி: தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, தும்மக்குண்டு, உப்புத்துறை, ஆட்டுப்பாறை, நொச்சி ஓடை, கரட்டுப்பட்டி, துரைச்சாமிபுரம், அய்யனார்கோவில், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், தற்போது வனப்பகுதியில் சர்க்கரை கொல்லி, ஆவாரம் பூ உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளைப் பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வனத்துறை மற்றும் காவல்துறை அச்சுறுத்தலால் தங்களுக்குப் பாதுகாப்பு தேவை என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில், மலைவாழ் மக்கள் சர்க்கரை கொல்லி மற்றும் ஆவாரம் பூ போன்ற மூலிகைகளைப் பறிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வனப்பகுதிக்குச் செல்லும் இவர்கள், மாலை 6 மணி வரை மலைப்பகுதியில் மூலிகைகளைப் பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தெரிவித்தனர். தற்போது, சர்க்கரை கொல்லி மூலிகை ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விலைபோய்க் கொண்டிருக்கிறது. மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் நேரடியாக வந்து இந்த மூலிகைகளைக் கொள்முதல் செய்து செல்கின்றனர்.
மூலிகை சேகரிப்பில் ஈடுபட்டாலும், கிடைக்கும் வருமானம் அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்குக் கூடப் போதியதாக இல்லை என்று மலைவாழ் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், வனப்பகுதிகளுக்குச் சென்று மூலிகைகள் பறிக்கும்போது, வனத்துறையினரின் அச்சுறுத்தலும், கெடுபிடியும் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர்கள் புலம்பினர். இதுகுறித்து மலைவாழ் மக்களின் தலைவர் வேலுச்சாமி அவர்கள் பேசுகையில், “மலைகளில் வாழும் எங்களுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நாங்கள் தேனெடுத்தல், கிழங்கு பறித்தல், மூலிகை பறித்தல் உள்ளிட்ட பணிகளைத் தலைமுறை தலைமுறையாகவும், கடந்த நான்கு தலைமுறையாகவும் செய்து வருகிறோம். இந்தக் காலங்காலமான பணிகளுக்கு இனிவரும் காலங்களில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்குத் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியும், அவர்களின் பாரம்பரியத் தொழில்களுக்கு உதவும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

















