நெல்லுக்கான கொள்முதல் ஈரப்பதச் சதவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு மறுப்பதை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ், “திமுக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது” என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் செயல்பாடுகளைப் பற்றியென்றால் இபிஎஸ் அமைதியாக இருப்பார், ஆனால் மாநில அரசைக் குறை கூறும்போது மட்டும் வீரத்துடன் பேசுகிறார் என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார். விவசாயச் சட்டங்களுக்கு ஆதரவு அளித்து விவசாயிகளை ஏமாற்றியது எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறினார். சாகுபடி பிரச்சனைகள் முதல் பயிர் காப்பீடு வரை பேச இபிஎஸ்க்கு தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழிவகுத்த கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் செய்த பெரும் துரோகம் எனவும் அவர் விளக்கினார். 11 தேர்தல்களில் தொடர்ச்சியாக மக்கள் அளித்த தோல்வி செய்தி கூட இபிஎஸ்க்கு புரியவில்லை என்றும் அமைச்சர் விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை ஏம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை முன்னெடுக்க இபிஎஸ்க்கு திறன் இல்லை என்றும், அமித்ஷாவைச் சந்தித்துக் கொண்டுவந்தபோது கூட காருக்குள் வியர்வைத் துடைத்த சம்பவத்தை மறந்துவிட்டார் எனவும் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பினார்.
















