நாகப்பட்டினம் : இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய பா.ஜ.க, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
நாகையில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் உரையாற்றியபோது, “நம் முன்னோர் அறுவடை செய்த விளை பொருட்களை ஆறு வகையாகப் பிரித்து, கோவில், கோவிலை பராமரிப்போர், விவசாயிகள், சேமிப்பு மற்றும் பொருளற்றோர் என அனைவருக்கும் பகிர்ந்தனர். அப்போது ஜாதி என்ற பிரிவு இல்லாதது. ஆங்கிலேயர் வருகையில்தான் இந்த நடைமுறைகள் உடைக்கப்பட்டு, ஜாதி உருவானது” என குறிப்பிட்டார்.
மேலும், “எல்லா மதத்திற்கும் தாய் மதம் ஹிந்து மதம். தாய் மொழியில் பகவத்கீதையைப் படிக்கும் போது தனித்த சக்தி கிடைக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மம் பல சோதனைகளை எதிர்கொண்டுள்ளது. இப்போது, மத குருக்கள் நேரடியாக மக்களிடம் பேசி, கிராம மக்களிடையே ஹிந்து மதம் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இளைஞர்களிடம் ஆன்மிகப் பற்றை உருவாக்குவது முக்கியம் என வலியுறுத்திய அவர், “நாம் எதையும் எதிர்பார்க்காமல் நம் வேலையில் மட்டுமே பற்றுடன் இருக்க வேண்டும்; இதுவே கர்மா. வாழ்க்கையில் சில சமயம் கீழே உட்கார வேண்டிய நிலையும், சில சமயம் மேலே உட்கார வேண்டிய நிலையும் வரும். ஆனால் அமரும் இடம் முக்கியமல்ல, செயலைச் சரியாக செய்வதே முக்கியம்” என கூறினார்.