தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், பிறக்கப்போகும் புத்தாண்டு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், திமுகவின் குடும்ப அரசியலுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகக் கடுமையாகச் சாடினார். இது நாடறிந்த உண்மை என்றும், அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளால் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாக வெடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் ஜனநாயகம் எங்கே போனது என்றும், மனிதநேயம் எங்கே பறந்து போனது என்றும் கேள்வி எழுப்பிய அவர், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறையை ஏவிவிடும் ஒரு சர்வாதிகார அரசாங்கமாகவே திமுக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுகவிற்கு, மீண்டும் ஒருமுறை வாக்களிக்கத் தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காகச் செயல்படும் இந்தச் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுதும் வகையில், வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டுப் புத்தாண்டு அமையும் என்றும், தமிழக மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வரும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மீண்டும் ஜனநாயக ஆட்சி மலரும் என்றும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் இன்று அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி, மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து சீரழிந்து நிற்பதாகக் குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், தலைகுனிந்து நிற்கும் தமிழகத்தை மீண்டும் தலைநிமிரச் செய்ய எடப்பாடியார் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். நாம் அனைவரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஒரு மாபெரும் சூளுரையை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், பிறக்கப் போகும் புத்தாண்டு எடப்பாடியாருக்கான ஆண்டாக அமையும் என்றும், அது தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொற்காலமாகத் திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். எடப்பாடியாருக்கு மகுடம் சூட்டி, குடும்ப அரசியலை வேரோடு அறுத்தெறிந்து, மீண்டும் ஒரு மக்கள் நல ஆட்சியைத் தமிழகத்தில் மலரச் செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளதாக அவர் தனது அறிக்கையில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

















