விண்வெளி கனவுகளை நனவாக்க திண்டுக்கல்லில் ‘இஸ்ரோ’ பேருந்து: அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்தார் ஆட்சியர் சரவணன்!

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில், மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் வகையில் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த அறிவியல் திருவிழாவை, எம்.எஸ்.பி. பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். முன்னதாக, பொதுமக்களிடையே இவ்விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எம். காலனி, பாண்டியன்நகர் ரவுண்டானாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ராக்கெட் வடிவிலான சிலையையும் ஆட்சியர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவதைப் போல, தற்போது மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க இத்திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி மாணவர்களின் 240 நுணுக்கமான அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இஸ்ரோ (ISRO) அமைப்பின் நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து இத்திருவிழாவின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுவதைப் போல மாணவர்களின் சிந்தனைகளும் வானளாவிய உயரத்தில் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்ட ஆட்சியர், அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்கினாலும் நமது தாய்மொழியான தமிழை இளைஞர்கள் என்றும் நிலைபெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த அறிவியல் திருவிழாவில் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரம் மாணவர்களும், கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களும், சுமார் 30 ஆயிரம் பொதுமக்களும் என மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமே மாவட்டமும் நாடும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற முடியும் என்பதால், பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளைப் போலவே இந்த அறிவியல் திருவிழாவையும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து ஒரு கொண்டாட்டமாகச் சிறப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவியல் அரங்குகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இவ்விழாவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, கார்டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மாறன் நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனா மணி, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, அறிவியல் திருவிழா திட்ட இயக்குநர் பேரா.முனைவர் மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

Exit mobile version