சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாகவே அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்துடன், அவர் தற்போதைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறாரா? தவெகவில் அவருக்கான பதவி என்ன? என்பதற்கான விவரங்களும் வேகமாக பரவி வருகின்றன.
அதிமுகவில் ஓபிஎஸ் அணியை ஆதரித்து வந்த செங்கோட்டையன், மதுரையில் நடந்த தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் – ஓபிஎஸ் ஆகியோரைச் சந்தித்தது அதிருக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாய், எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2000 பேரை கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, செங்கோட்டையன் அடுத்த அரசியல் நிலைப்பாடு குறித்து ஊகங்கள் எழுந்தன. அந்த சூழ்நிலையில்தான் அவர் தவெகவில் இணையப் போவது குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
விஜயை சந்திக்க தயாரா?
செங்கோட்டையன், தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி உடன் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் விஜயை நேரில் சந்தித்து கட்சியில் சேருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று MLA ராஜினாமா செய்யப் போகிறாரா?
கோவையிலிருந்து சென்னைக்கு வந்துள்ள செங்கோட்டையன், இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவலும் பரவுகிறது. இதையடுத்து, நாளை அல்லது நாளை மறுநாள் விஜயை சந்தித்து தவெகவில் இணையும் நிகழ்வு நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
நேற்று செய்தியாளர்கள் நேரடியாக “தவெகவில் சேரப் போகிறீர்களா?” என்று கேட்டபோதும், செங்கோட்டையன் அதை மறுக்கவில்லை. ஆனால் உறுதிப்படுத்தவும் இல்லை இது அரசியல் வட்டாரங்களை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
தவெகவில் அவருக்கான பதவி என்ன?
செங்கோட்டையன் இணைந்தால்,
அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என தகவல். விஜய் அமைத்துள்ள 28 பேர் கொண்ட நிர்வாகக் குழு அவர் கண்காணிப்பில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெகவுக்கு இது ஏன் முக்கியம்?
அதிமுகவில் பல தசாப்தங்கள் செயல்பட்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையன், புதியதாக உருவாகி வரும் தவெகவுக்கு பெரிய பலம் சேர்க்கக்கூடியவர் என்பதே அரசியல் கணிப்பு. கொங்கு மண்டலத்தில் அவருக்கு உள்ள செல்வாக்கும் கட்சிக்கு கூடுதல் வலிமை தரும். எடப்பாடி பழனிசாமி 30ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே செங்கோட்டையன் தனது அடுத்த நடவடிக்கையை அறிவிக்கலாம் என தகவல்.
