உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேச முடியாது : மைத்ரேயன் விவகாரத்தில் இபிஎஸ் கருத்து

திருப்பத்தூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும்” என்று தெரிவித்தார்.

திருப்பத்தூரில் இன்று நிருபர்களை சந்தித்த இபிஎஸ், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர், “இது சர்வாதிகாரப் போக்கு. எல்லா நாடுகளும் சமமாக வரி விதிக்க வேண்டும். வேண்டுமென்று அதிக வரி விதித்து ஒரு நாட்டை அடிமைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரனும் இபிஎஸும் ஒரே மேடையில் சேருவார்கள் என கூறியதை பற்றி, “அது அவரிடம் கேளுங்கள். பாஜ கூட்டணி எங்களுடன் உள்ளது. மற்றவை அனைத்தும் நாங்கள் தான் முடிவு செய்வோம். சந்தர்ப்பம் வரும் போது பதில் தரப்படும்” என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் அதிக கொலைகள் நடப்பதாக கூறப்பட்டதைப் பற்றி, “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ரவுடிகளின் ராஜ்ஜியம் நிலவுகிறது. போதைப்பொருள் விற்பனை அதிகரித்து, அதனால் விபரீதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன” என அவர் குற்றம்சாட்டினார்.

ஒபிஎஸ் பாஜ கூட்டணியில் சேர்ந்து இணைந்து செயல்படுவாரா என்ற கேள்விக்கு, “அதை அவரிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து, “இது உட்கட்சி விவகாரம். ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு உண்டு. அதன்படி நடவடிக்கை எடுப்போம். அதை வெளியே பேசுவது சரியல்ல” என்று இபிஎஸ் தெரிவித்தார்.

Exit mobile version