272 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் பறவை மோதியதால் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாக்பூரில் இருந்து கோல்கத்தாவுக்கு புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E812), புறப்பட்ட சில நிமிடங்களில் பறந்துகொண்டிருந்தபோது பறவை மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
உடனடியாக விமானம் கோல்கத்தாவுக்கு செல்லாமல் திருப்பி நாக்பூர் விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.
பின்னர், விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழுவினர் விமானத்தை ஆய்வு செய்தபோது அதன் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. சம்பவத்துக்கான விசாரணை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.