புதுடில்லி:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய விமானப் படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை இன்று (மே 7) நள்ளிரவில் தொடங்கி, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை விமானம் மூலம் தாக்கியது.
இந்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு இன்று நாடு முழுவதும் போர் கால ஒத்திகையை அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் அதை சாதாரண ஒத்திகையாகவே எண்ணி தளர்வாக இருந்தது. ஆனால், இந்திய ராணுவம் அதிரடியாக செயல்பட்டு பாகிஸ்தானின் எதிர்பார்ப்புக்கு மாறாக நேரடி தாக்குதலை மேற்கொண்டது.
தாக்குதல் எங்கே நடந்தது?
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு பெரிதும் பதறியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் உறுதிப்படுத்தல்
இந்த தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
பாக். ராணுவம் பதிலடி
இந்திய விமான தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று அதிகாலை 3 : 45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் உள்ளிட்ட சில பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ விளக்கம்
இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. பாக். ராணுவ தளங்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த்!”