கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நாக்-அவுட் போட்டி கோயம்புத்தூர் அவெஞ்சர்ஸ் மற்றும் எஸ்.வி.ஆர். அணிகள் அபார வெற்றி.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (CDCA) சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான லீக் போட்டிகளில் நுழைவதற்கான தகுதிச் சுற்று நாக்-அவுட் கிரிக்கெட் போட்டிகள் மாநகரின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் புரோவாஸ் கிரிக்கெட் அகாடமி மற்றும் கோயம்புத்தூர் அவெஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த புரோவாஸ் அகாடமி அணியினர், எதிரணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 22.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அபாரமாகப் பந்துவீசிய கோயம்புத்தூர் அவெஞ்சர்ஸ் வீரர் முகமது அபாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சரிவை ஏற்படுத்தினார். தொடர்ந்து களமிறங்கிய கோயம்புத்தூர் அவெஞ்சர்ஸ் அணி, 11.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

மற்றொரு மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஸ்.வி.ஆர். கிரிக்கெட் அகாடமி அணியும், யுனைடெட் வாரியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் ஆடிய எஸ்.வி.ஆர். அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய மாணிக்கம் 58 ரன்களும், நடராஜன் 53 ரன்களும், முத்துகுமார் 52 ரன்களும் எடுத்து அரைசதம் கடந்தனர்.

தொடர்ந்து 248 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய யுனைடெட் வாரியர்ஸ் அணி, எஸ்.வி.ஆர். அணியின் பந்துவீச்சில் நிலைகுலைந்தது. அந்த அணி வெறும் 10.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 24 ரன்களுக்குச் சுருண்டது. எஸ்.வி.ஆர். அணியின் பந்துவீச்சாளர் பிரபு 5 விக்கெட்டுகளையும், சுபாஷ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் இமாலய வெற்றிக்கு வித்திட்டனர். லீக் போட்டியில் நுழைய இன்னும் பல அணிகள் மோதுவதால், வரும் நாட்களிலும் போட்டிகள் தரம் குறையாமல் நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version