உலகப் புகழ்பெற்ற சோழர் காலக் கட்டடக்கலை மற்றும் கலை நயத்தைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூரில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான ‘சோழர் அருங்காட்சியகம்’ அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளைத் தமிழக அரசு தற்போது வேகப்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய தஞ்சையில், அவர்களின் வீர வரலாறு மற்றும் பண்பாட்டுப் பொக்கிஷங்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காகத் தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல அலுவலகத்தின் பின்புறம் உள்ள சுமார் 12 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகக் கட்டடம் அமையவுள்ளது. இதில் சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகள், போர் ஆயுதங்கள், ஆபரணங்கள் மற்றும் கடல் கடந்த வணிகத்தை விளக்கும் அரிய புகைப்படங்கள் போன்றவை சர்வதேசத் தரத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது தமிழக பொதுப்பணித்துறையின் (PWP) பாரம்பரியப் பிரிவு சார்பில் இதற்கான டெண்டர் அதிகாரப்பூர்வமாக விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சோழர் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த அருங்காட்சியகம் கட்டுவதற்கு 51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் இதற்கான டெண்டர் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அரசு கடுமையான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைவதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தின் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, வருங்காலத் தலைமுறையினர் சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த கல்வி மையமாகவும் இது திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
