தமிழகத்தின் மிக முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான நாமக்கல்லில், நீண்ட காலத் தேவையாக இருந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சுமார் 198.12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய புறவழிச்சாலைத் திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சி நாமக்கல் மாநகராட்சி வேட்டாம்பாடியில் நடைபெற்றது. இதில், மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, கட்டி முடிக்கப்பட்ட சாலைகளைத் திறந்து வைத்ததுடன், புதிய சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக, மரூர்பட்டி முதல் வேட்டாம்பாடி வரையிலும், வேட்டாம்பாடி முதல் வசந்தபுரம் வரையிலும் சுமார் 95.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு முக்கியப் புறவழிச்சாலைகளை அமைச்சர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் அடுத்தகட்டமாக வசந்தபுரம் – லத்துவாடி மற்றும் லத்துவாடி – வள்ளிபுரம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய சாலைகளுக்கான பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “நாமக்கல் நகரின் ஒட்டுமொத்தப் புறவழிச்சாலைத் திட்டம் 297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலைப்பட்டி முதல் வள்ளிபுரம் வரை மொத்தம் 22 கிலோமீட்டர் நீளத்திற்கு ஐந்து கட்டங்களாக இப்பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 11 கிராமங்களில் இருந்து 146 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு 104 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பேருந்து நிலையம் முதல் வேட்டாம்பாடி வரை அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது 35 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பாலம் 2026 ஜூலை மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்று விரிவாக விளக்கினார்.
நாமக்கல் நகரில் லாரி பாடி கட்டும் தொழில், ஆசியாவிலேயே பெரிய கோழிப்பண்ணைகள் மற்றும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்தப் புறவழிச்சாலைத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்போது, வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் வெளியே சென்றுவிடும். இதன் மூலம் நகரின் உட்புறச் சாலைகளில் நெரிசல் பெருமளவு குறைந்து, விபத்துகள் தவிர்க்கப்படும். மேலும், இந்தச் சாலையைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளின் பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மேலும், நாமக்கல் மாவட்டத்தின் லாரி பாடி பில்டர்ஸ் சங்கம், கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு இத்திட்டத்திற்குத் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.

















