தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமை தாங்கி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகையினை வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களுக்குப் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 2,19,309 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை மற்றும் மகளிர் குழுக்களால் நடத்தப்படும் மொத்தம் 390 நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 219 டன் பச்சரிசி, 219 டன் சர்க்கரை மற்றும் 2.19 லட்சம் முழு நீளக் கரும்புகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, தகுதியான ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்படும் ரூ.3,000 ரொக்கப் பரிசுக்காக மட்டும் நாகை மாவட்டத்திற்கு ரூ.65 கோடியே 79 லட்சத்து 27 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜனவரி 8 முதல் அனைத்துக் கடைகளிலும் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அதிகாரிகள், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தகுந்த பாதுகாப்பு மற்றும் டோக்கன் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தனர். மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்தப் பரிசுத் தொகுப்பு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். இவ்விழாவில் நாகப்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் பாத்திமா சுல்தானா, நகர்மன்றத் துணைத்தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார், அரசு மீனவர் நலவாரிய உறுப்பினர் கோ.மனோகரன் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன் உள்ளிட்ட பல முக்கியத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக் காலச் செலவுகளைச் சமாளிக்க அரசு வழங்கும் இந்த ரூ.3,000 ரொக்கம் தங்களுக்குப் பேருதவியாக இருப்பதாகப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
















