மேட்டுப்பாளையத்தில் இந்தூர் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி ஊட்டி கிழங்குக்கு மாலத்தீவில் விலை உயர்வு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்தி மைதானப் பகுதியில் செயல்பட்டு வரும் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகளில், கடந்த சில நாட்களாக உருளைக்கிழங்கு விலை ரகங்களுக்கு ஏற்ப அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டம் மட்டுமன்றி, கர்நாடகாவின் கோலார் மற்றும் வடமாநிலமான மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து நாள்தோறும் பெருமளவில் உருளைக்கிழங்கு வரத்து உள்ளது. மேட்டுப்பாளையம் சந்தைக்கு வரும் மொத்த உருளைக்கிழங்கில் சுமார் 50 சதவீதம் அண்டை மாநிலமான கேரளாவுக்குத் தடையின்றி விற்பனைக்குச் செல்கிறது. தற்போதைய நிலவரம் குறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலாளர் பாபு கூறுகையில், வடமாநிலங்களிலிருந்து இந்தூர் ரகக் கிழங்குகள் சந்தைக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதால் அதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தூர் ரகத்தைச் சேர்ந்த ‘புக்கராஜ்’ மற்றும் ‘சூப்பர் 6’ ஆகிய ரகங்களின் விலை சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரங்களில் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இந்தூர் புக்கராஜ் கிழங்கு 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் 500 முதல் 600 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சூப்பர் 6 ரகக் கிழங்கு ஒரு மூட்டை 600 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கேரள மாநில நுகர்வோரிடையே இந்தூர் ரகக் கிழங்குகளுக்குத் தனி வரவேற்பு இருப்பதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள் இதனை ஆர்வமுடன் கொள்முதல் செய்து செல்கின்றனர். மற்றொரு புறம், தரத்தில் சிறந்ததாகக் கருதப்படும் கோலார் ரகக் கிழங்குகள் ஒரு மூட்டை 1,200 முதல் 1,300 ரூபாய் வரை நிலையான விலையில் விற்பனையாகி வருகிறது.

இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையில் விளையும் ஊட்டி உருளைக்கிழங்கின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு மூட்டை ஊட்டி உருளைக்கிழங்கு தரத்தைப் பொறுத்து 1,100 ரூபாய் முதல் 1,600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முக்கியக் காரணமாக, சர்வதேச அளவில் மாலத்தீவு போன்ற நாடுகளில் ஊட்டி உருளைக்கிழங்கிற்கு ஏற்பட்டுள்ள பெரும் வரவேற்பு சுட்டிக்காட்டப்படுகிறது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவும் அதிகரித்துள்ளதால் ஊட்டி உருளைக்கிழங்கு விவசாயிகளுக்குப் போதிய லாபம் கிடைத்து வருகிறது. வரும் நாட்களில் வடமாநில வரத்து மேலும் அதிகரித்தால் இந்தூர் ரகக் கிழங்குகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் கணித்துள்ளனர்.

Exit mobile version