மயிலாடுதுறை கொத்த தெருவைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் . இவருக்கும், கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளர் கதிரவன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் அப்போது கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அப்போது, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த கண்ணன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தகொலை தொடர்பாக, கலைஞர் காலணியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளர் கதிரவன், தேவா என்கிற மகாதேவன், சேது, உள்ளிட்ட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அனைவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் கண்ணன் கொலைக்கு பழிக்கு பலியாக கலைஞர் காலனியை சேர்ந்த இளைஞர் அஜித்குமார் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் 21 பேர் நீதிமன்றத்தில் கண்ணன் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 21 பேரில் பிரபாகரன் என்பவர் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். மேலும் கொலை வழக்கில் 21 பேர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு ஆஜராகிய நிலையில் அதில் 9 பேர் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு 12 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட கதிரவன், தேவா என்கிற மகாதேவன், சேது, திவாகர், சந்தோஷ், கார்த்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஹரிஷ், பிரிதிவிராஜ் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பிரபாகரனிடம் நேரடியாக வந்து நீதிபதி சத்தியமூர்த்தி தங்களை விடுவித்ததாக தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமசேயோன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் என்பவரை படுகொலை செய்யப்பட்ட கண்ணனின் சகோதரர் மில்கி சந்திரமோகன் தரப்பினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கும் நடைபெற்று வருவதாகவும், அஜித் குமார் இறந்ததால் அவர் மீது உள்ள வழக்கு அற்று விட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமசேயோன் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 24வது வழக்காக ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் ஒரு கொலை வழக்கில் ஒரே நேரத்தில் முதல் முறையாக 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது . மேலும் இந்த வழக்கில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் அதில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் பிறழ் சாட்சி அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்து கடிதம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

 
			















