“மலைகளின் இளவரசி” என்று போற்றப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சமீபகாலமாக மலைத்தள பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, சட்டவிரோதப் பாறைத் தகர்ப்புகள் அதிகரித்து வருவது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த செல்வந்தர்கள் நிலங்களை வாங்கி ஆடம்பர பங்களாக்களைக் கட்டி வருகின்றனர். இந்தக் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கற்களைச் சேகரிக்க, அனுமதியின்றிப் பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
முன்னதாக, கொடைக்கானல் மலைப்பகுதியின் இயற்கை சமநிலையைப் பேணிக் காக்கும் பொருட்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் வள்ளலார் அவர்கள், பாறைத் தகர்ப்பு, கம்ப்ரஷர் கருவிகள், போர்வெல் இயந்திரங்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதித்திருந்தார். இந்தத் தடை உத்தரவு தற்போதும் நடைமுறையில் உள்ள போதிலும், களத்தில் உள்ள சில அதிகாரிகள் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிகாரிகளும், சில அரசியல் பிரமுகர்களும் ஒரு ‘சிண்டிகேட்’ போலச் செயல்பட்டு, தடையை மீறி இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, கொடைக்கானல் செல்லப்புரம் பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான குடியிருப்புப் பகுதிகளில், எவ்வித அச்சமுமின்றிப் பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புப் பகுதிகள் அருகிலேயே இருந்தும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் இரவு பகலாகப் பாறைகளைத் தகர்ப்பதும், இயந்திரங்களைக் கொண்டு மண்ணைச் சீரமைப்பதும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதேபோல் சிவனடி ரோடு, பூம்பாறை, பெருமாள்மலை மற்றும் கொடைக்கானல் மலைச்சாலை ஓரங்களிலும் இத்தகைய சட்டவிரோதப் பணிகள் தாராளமாக அரங்கேறி வருகின்றன.
வருவாய்த்துறை அதிகாரிகள் இந்தப் பணிகளுக்குப் பின்னணியில் இருந்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிலச்சரிவு அபாயம் உள்ள மலைப்பகுதியில், பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பது ஒட்டுமொத்த மலைக்கே பேராபத்தாக முடியும் எனச் சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள், உடனடியாக கொடைக்கானல் மலைப்பகுதியில் நேரில் ஆய்வு நடத்தி, இது போன்ற விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், சட்டவிரோதப் பாறைத் தகர்ப்பிற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொடைக்கானலின் இயற்கை எழிலைப் பாதுகாக்க முடியும் என்பது இப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.














