ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் போராட்டத்தை தூண்டிவிடும் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், தினம்தோறும் காலை 7:00 மணிக்கு கள ஆய்வு செய்வதை நிறுத்திட வேண்டும், குப்பைகளை சேகரிக்க தள்ளுவண்டி, மூன்று சக்கர வண்டிகளுக்கு பதிலாக மின்கலன் வண்டிகளை வழங்கி பராமரிக்க வேண்டும், ஜனவரி மாதம் முதல் சுகாதார ஊக்குனர்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
















