ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விரல் ரேகை பதிவு மே 31ம் தேதிக்குள் அவசியம் !

சென்னை :
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை பெறும் வகையில் ரேஷன் கார்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மகளிர் உரிமைத்தொகை போன்ற பல நலத்திட்டங்கள் ரேஷன் கார்டு வழியாகவே வழங்கப்படுகின்றன.

தற்போது மாநில அரசு, மத்திய அரசின் உத்தரவின்படி, பி.எச்.எச். மற்றும் அந்தியோதயா வகை ரேஷன் கார்டுதாரர்களின் உறுப்பினர் விவரங்களை சரிபார்க்கும் பணியை தீவிரமாக நடத்தியுள்ளது. இதில், குடும்பத்தில் உயிரிழந்தோர் மற்றும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயர்கள் அகற்றப்படாமல் உள்ளதையடுத்து, விரல் ரேகை மற்றும் ஆதார் மூலம் உறுப்பினர்களை உறுதி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையை கடந்த ஆண்டு தொடங்கி, மார்ச் 31க்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை சுமார் 50 லட்சம் உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்யவில்லை என தகவல். எனவே, அவர்களுக்கு மே 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் பணிபுரியும் ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே IMPDS அல்லது e-KYC மூலமாக விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். இதை தவிர்த்தால், அங்கீகரிக்கப்பட்ட நலத்திட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடைசி நாள்: மே 31, 2025

Exit mobile version