காஞ்சிபுரம் மாவட்டம் இளையனார்வேலூர் என்னுமிடத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் கெஜவள்ளி என அழைக்கப்படுகிறாள்.
இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் இருக்கிறது. தீர்த்தம் சரவண தீர்த்தம் ஆகும். இத்திருத்தல புராணங்களின்படி இவ்வூருக்கு அருகில் உள்ள கடம்பரை எனும் ஊரில் காசியப முனிவர் தான் செய்த யாகத்தை தடுக்க முயற்சிக்கும் மலையமான், மாகறன் என்னும் இரு அரக்கர்களை அழிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார்.

முனிவருக்கு காட்சி தந்த சிவபெருமான் தன் மகன் முருகன் அரக்கர்களை அழித்து, யாகம் நடைபெற உதவி புரிவான் என அருள்புரிந்தார். தந்தையின் கட்டளையை ஏற்று முருகப்பெருமான் அவ்விரு அரக்கர்களையும் அழித்தபோது, அவர் வீசிய வேல் இந்த ஊரின் பகுதியில் விழுந்ததால் இவ்வூருக்கு இளையனார்வேலூர் என பெயர் பெற்றது.
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உடைய கோயிலாக இது இருக்கிறது. சுவாமிநாத சித்தரால் இக்கோயில் உருவாக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.
இந்த கோயிலில் முருகனுக்கு காமிக ஆகமம் பூஜை செய்யப்படுகிறது. 
சித்திரை திருவிழா வைகாசி வசந்த உற்சவம், ஆவணி பவித்திர உற்சவம், புரட்டாசியில் கெஜவள்ளி உற்சவம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
இந்திருக்கோயில் சந்தான கணபதி, ஸ்ரீபெருதண்டஉடையார், திரிபுரசுந்தரி, ஏகாம்பரநாதர், காசிவிஸ்வநாதர்,ஸ்ரீ நிர்த்த கணபதி, ஸ்ரீவேலாயுதமூர்த்தி, ஸ்ரீசண்டீகேஸ்வரர், நாகர்கள், சுவாமிநாதசுவாமி சித்தர் சமாதி, போன்றவர்களுக்கு தனி தனி சன்னதி உண்டு.

நேரடி மற்றும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள், நெடுநாட்களாக வியாபாரம், தொழில்களில் இருக்கும் நஷ்டங்கள், குழந்தை பாக்கியமின்மை
போன்றவற்றிற்கு இங்கு வந்து வழிபடுவதால் சிறந்த பலன் உண்டாவதாக அனுபவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப பல்லக்கு எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
 
			
















