பா.ஜ.க இல்லையெனில் தி.மு.க. 20 ஆண்டுகளுக்கு முன் அழிந்திருக்கும் : சீமான் விமர்சனம்

சென்னை : பாஜக இல்லையெனில் திமுக கட்சி 20 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்திருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள “உங்களுடன் முதல்வர்” திட்டம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “இவ்வளவு நாளாக முதல்வர் யாருடன் இருந்தார் என்பதற்கு யாரிடம் பதிலிருக்கிறது? வீடு தேடி அரசு இப்போது செல்கிறது. இதுவரை யாரை தேடி சென்றது?” என கேள்வியெழுப்பினார்.

தற்போதைய அரசியல் சூழலை விமர்சித்த அவர், “ஓரணியில் திரள்வோம் என்கிறார்கள். ஆனால், கூடி கொள்ளையடிக்க, கூடி கொலை செய்யத்தான் அந்த ஓரணி தேவையாகிறது. தேர்தல் ஆறுமாதமே உள்ள நிலையில் இப்போது திரள்கிறார்கள். இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” என்றார்.

“மொழி காக்க போடப்பட்டவர்கள் மண் காக்கிறார்கள். மண், மானம், மொழி காக்க எப்போதுவே வருவீர்கள்? தேர்தல் வரும்போதுதான் காதல் வருகிறது, சாலைகள் போடப்படுகின்றன, குழிகள் மூடப்படுகின்றன, இது தான் தேர்தல் அரசியல்,” என தேர்தல் கால திட்டங்களை சாடினார்.

மேலும், “நாட்டில் உண்மையான மக்கள் அரசியல் மலரும் நாளில் தான் காமராஜரின் ஆட்சி போலியில்லாமல் மலரும். இல்லையெனில் அந்த நாட்கள் திரும்ப வாய்ப்பில்லை,” என குறிப்பிட்டார்.

பாஜக இல்லையென்றால் திமுக கட்சி இருந்திருக்காது எனும் கருத்தையும் அவர் பதிவு செய்தார். “திமுகவை பதவியில் அமர்த்தியது ஸ்டாலினா? மோடியா? அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு நடந்தது என்ன? ரெய்டு வந்ததும் ஓடி மோடியை சந்தித்தது யார்? கையை பிடித்து கெஞ்சியது யார்?” என சீமான் கேள்விகள் எழுப்பி, திராவிட கட்சிகளின் அரசியலமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version