இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி, தனது சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, பெருநகரப் பகுதிகளில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.50,000 குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் ரூ.25,000, கிராமப்புறங்களில் ரூ.10,000 குறைந்தபட்ச இருப்பு அவசியம். Semi-urban பகுதிகளில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.25,000 பராமரிக்க வேண்டும்.
ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பழைய விதிமுறைகள் தொடரும். அதாவது, பெருநகர, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 குறைந்தபட்ச இருப்பு போதுமானது.
குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காதவர்களுக்கு, குறைவான தொகையில் 6% அல்லது ரூ.500 – எது குறைவோ, அதையே அபராதமாக விதிக்கப்படும்.
இதனுடன், சேமிப்புக் கணக்கில் மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே பணத்தை இலவசமாக டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். ஒட்டுமொத்த ரொக்க டெபாசிட் வரம்பு மாதத்திற்கு ரூ.1 லட்சம். மேலும், மூன்றாம் தரப்பினர் செய்யும் ரொக்க டெபாசிட் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
2025 ஏப்ரல் மாதம் முதல், ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.25% குறைத்து, ரூ.50 லட்சம் வரை இருப்பு வைத்திருப்போருக்கு தற்போது 2.75% வட்டி வழங்குகிறது.
இதற்கிடையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2020ஆம் ஆண்டு குறைந்தபட்ச இருப்பு விதியை முற்றிலும் ரத்து செய்தது. பிற வங்கிகள் பெரும்பாலும் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே குறைந்தபட்ச இருப்பை நிர்ணயித்து வருகின்றன.