நியூயார்க்: ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி உலக பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தானியங்கி முறையில் பல வேலைகள் நடைபெறும் நிலையில், மனிதத் திறன் தேவையற்றதாக மாறக்கூடும் என பல்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ஏஐ வளர்ச்சியின் தாக்கம் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் (IBM) நிறுவனத்திலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், சுமார் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐபிஎம் நிறுவனத்தின் கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களிலுள்ள அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களே இந்தப் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் 200 பணியாளர்கள் நீக்கப்பட்டதோடு, மனிதவள (HR) துறையிலும் நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
முக்கியமாக, HR பணிகளில் அடங்கும் மெயில் அனுப்புதல், சம்பள கணக்கீடு, வரி தொடர்பான கணக்குகள் போன்றவை ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்தத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்துள்ளன.
ஐபிஎம் மட்டுமின்றி பல்வேறு மென்பொருள் மற்றும் கணினி நிறுவனங்களும் தற்போது ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றம் எதிர்கால வேலைவாய்ப்பு நிலையை சிக்கலாக்கும் என்ற கவலை தொழில்துறையில் உருவாகி வருகிறது.