ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூர் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணிநேரத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நேர்மையின் விளக்கமாகக் கருதப்படும் ரிங்கு சிங் ராஹி, ஜூன் 28ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தின் போவாயன் துணை கலெக்டராக பொறுப்பேற்றார். தனது முதல் நாளிலேயே அலுவலக கழிப்பறை சுத்தமாக இல்லாததற்காக பொறுப்பேற்று, வக்கீல்களின் முன்னிலையில் தோப்புக்கரணம் போட்டு தண்டனை விதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலானது.
இதனைத் தொடர்ந்து, அவர் ஜூன் 30ஆம் தேதி லக்னோவில் உள்ள வருவாய் ஆணையத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது, அவரது தோப்புக்கரணம் நடவடிக்கையால் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, “அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என ஒரு உயர் அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிங்கு சிங் ராஹி, 2008ம் ஆண்டு முஷாபர்நகரில் மாவட்ட நலத்துறை அதிகாரியாக இருக்கும் போது ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்தினார். 2009ல் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் அவர் உயிர்தப்பினாலும், அவரது முக எலும்புகள் சேதமடைந்தன; வலது கண் பார்வையையும் இழந்தார்.
2012ல் பதவி உயர்வு மறுக்கப்பட்டதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மனநல மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டார். 2012-2021 காலக்கட்டத்தில் பொது சிவில் துறையில் பணியாற்றிய இவர், மதுராவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
2022ம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது ஷாஜகான்பூரில் தனது கடமைகளை தொடங்கியிருந்த நிலையில், ஏற்கனவே நில ஏலங்களில் ஏற்பட்ட குழப்பங்களை ரத்து செய்தல், வரவுசெலவுகளை டிஜிட்டல் மயமாக்கல், வாட்ஸ்அப்பில் புகார்கள் பெறல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
ரிங்கு சிங் கருத்து:
பணியிட மாற்றம் குறித்து அவர் கூறுகையில், “என் கண், முகம், அமைதி — அனைத்தையும் இழந்தேன். ஆனால் அநீதிக்கு எதிராக சண்டையிடுவதை மட்டும் இன்றும் நிறுத்தவில்லை. எத்தனை முறை பணியிட மாற்றம் செய்தாலும், நியாயத்திற்காக சண்டையிடுவதை நிறுத்த மாட்டேன். எந்த இடத்தில் பணியமனமும் இருந்தாலும், நான் என் கடமையைச் செய்ய தயார். தவறை பொறுத்துக்கொள்ள மாட்டேன்,” என்றார்.