நெல்லை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இனி நடிகர் விஜய் குறித்து எந்த இடத்திலும் பேசமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2026 தேர்தலில் விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் தமிழகமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். ஆனால் மக்கள் பிரச்சினைகளை விட, விஜய் குறித்தும் கூட்டணி குறித்தும் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேச மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுவதாக குற்றம்சாட்டிய அவர், “தேர்தல் ஆணையம் மற்றும் நீதியரசர்கள் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையான தேர்தலை நடத்த வேண்டும். கண் கூடாக வாக்குக்கு காசு கொடுப்பது நடைபெறுகிறது. பீகார் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சீர்திருத்தம் வரவேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.