சென்னை: மூத்த தமிழறிஞர், கவிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான ஈரோடு தமிழன்பனுக்கு நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் வழங்கப்பட்ட காவல்துறை மரியாதை இலக்கிய உலகை நெகிழச் செய்துள்ளது. இந்த மரியாதையை உத்தரவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
92 வயதில் காலமான ஈரோடு தமிழன்பன், மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் மற்றும் கலாச்சாரத் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அரும்பாக்கம் மின் மயானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச்சடங்கில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி காவல்துறை மரியாதையாக 30 குண்டுகள் முழங்க தகனம் நடைபெற்றது. தமிழுக்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய ஈரோடு தமிழன்பனின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த மரியாதை வழங்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்த நிகழ்வை தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட குறிப்பில், ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்ட மரியாதை மனதை நெகிழச் செய்ததாக தெரிவித்தார். பத்மஶ்ரீ போன்ற தேசிய விருதுகள், பதவிகள் எதுவும் பெறாதவராக இருந்தாலும் தமிழின் உண்மைப்பணியாளரான புலவருக்கு வழங்கப்பட்ட அரச மரியாதை இலக்கிய உலகுக்கு ஆறுதலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிகழ்வுக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், “ஒரு கவிஞனை கௌரவத்துடன் அனுப்பிவைத்தீர்கள்; இலக்கியவாதிகளின் சார்பில் நன்றி” என்று தெரிவித்ததாகவும் வைரமுத்து கூறினார்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்துக்கு நேர்மையான மரியாதை வழங்கும் பாரம்பரியம் தளபதி ஸ்டாலின் ஆட்சியில் தொடர்வதைப் பார்த்து தமிழன்பர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்றும், கவிஞர் எழுத்துகள் மரணமற்றவை எனவும் வைரமுத்து பதிவில் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
















