லண்டன்: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் நடந்த முதலீட்டு சந்திப்புகளில், மொத்தம் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.7,020 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜெர்மனி பயணத்தை முடித்து இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள், அவருக்கு பூங்கொத்து வழங்கி, செல்பி எடுத்துக் கொண்டு உற்சாகமாக வரவேற்றனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின், “இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன். தொலைதூரங்களை கடந்து உற்சாகத்துடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.















