கரூர் : கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் 41 பேரின் உயிரைப் பலிகொண்ட நிலையில், அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் குறித்து அவரது மனைவி ராணி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலையே உலுக்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறை, தவெக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தது. அதன்படி கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் தலைமறைவாக இருந்த மதியழகனை, தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. காவல்துறை எச்சரிக்கையையும் மீறி கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் கூடுதல் எஸ்.பி. தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதியழகனின் மனைவி ராணி, “எனது கணவரை கைது செய்த போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்பதை இதுவரை எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. கூட்ட நெரிசலில் நானும் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று தான் வீடு திரும்பினேன். என் கணவருக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் காவல்துறை தான் முழு பொறுப்பு. அஜித் குமார் லாக்கப் டெத் போல எந்த சூழலும் என் கணவருக்கு ஏற்படக்கூடாது. என் கணவர் சட்டத்தை மதிப்பவர்தான்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.