நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை – சட்டப்பூர்வ வாதத்தையே முன்வைத்தேன் என அமைச்சர் ரகுபதி விளக்கம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தான் தெரிவித்த கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்றும், ஒரு வழக்கறிஞராக முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு எப்போதும் நீதிமன்றங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாகவும், எத்தகைய சூழலிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்குக் கிடையாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஆதாரங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருபவர்கள்தான் அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டுமே தவிர, அரசின் மீது பழியைப் போடுவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் தான் பயன்படுத்திய உதாரணங்கள் குறித்து விளக்கிய அமைச்சர், “ஒருவர் நடுரோட்டில் பிணத்தை எரிக்க வேண்டும் என்று கோரினால், அதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பிணத்தை எரிக்கச் சுடுகாடுதான் சரியான இடம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார். இது ஒரு கருத்தை விளக்குவதற்காகச் சொல்லப்பட்ட உதாரணமே தவிர, இதில் அநாகரிகமோ அல்லது நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் நோக்கமோ ஒரு சதவீதம் கூட இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இது ஒரு உரிமையியல் (Civil) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது வலுவான சட்டக் கருத்துகளை முன்வைக்கப் போவதாகத் தெரிவித்த அமைச்சர், புதிய இடங்களைத் தீபம் ஏற்றத் தேர்ந்தெடுப்பது தேவையற்ற முன்னுதாரணங்களை உருவாக்கும் என்று எச்சரித்தார். “நாளை திருவண்ணாமலையில் குறிப்பிட்ட இடத்தில் ஏற்றக்கூடாது என்றும், வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்க முடியுமா?” என்று அவர் வினவினார். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பைப் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், சட்டத்திற்கு உட்பட்டே தனது அனைத்து வாதங்களும் அமையும் என்று மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார்.

Exit mobile version