மயிலாடுதுறையில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கினர்.
கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்காலக் கனவுகள் மற்றும் தேவைகளை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 2.34 லட்சம் குடும்பங்களிலும், நகர பகுதிகளில் 35,000 குடும்பங்களிலும் உங்கள் கனவை சொல்லுங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 557 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சீனிவாசன், நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

















