விவசாயத்தில் களைச் செடிகளை நீக்கி நல்ல பயிர்களை விளைவிப்பது போல, லேப்டாப் மூலம் தீய பழக்கங்களை விடுத்து நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய பின்பு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
உலகம் உங்கள் கையில் என்ற உன்னத திட்டத்தின் மூலம் 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி துவக்கி வைத்ததையடுத்து முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவசமடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செல்லூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 186 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் கூறும் போது….மாணவர்களுக்கு முதன் முதலில் மடிக்கணினி வழங்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். அதுமட்டுமல்லாமல் மாநிலத்திலேயே முதல் முதலாக கணினி மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்தை மாற்றி காட்டியவர் முத்தமிழர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா கூறும் போது…
திருவாரூர் மாவட்டம் என்றாலே விவசாயம் தான் நினைவுக்கு வரும். அந்த விவசாயத்தில், நல்ல பயிர்களுக்கு மத்தியில் களைச்செடிகள் நமக்கு தெரியாமலே முளைத்திருக்கும். அதனை அகற்றி நல்ல பயிர்களை மட்டும் விவசாயிகள் விளைவிப்பார்கள். அதுபோல இந்த லேப்டாப் மூலம் தீய பழக்கங்களை விடுத்து நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடவாசல் வட்டாட்சியர் இளங்கோவன், திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் செந்தில் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















