தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், வரும் 9-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே படத்தை தணிக்கைக்கு அனுப்பியும் சான்றிதழ் வழங்காததால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, 3 காட்சிகளை நீக்கும்படி சென்சார் போர்டு கூறியதை ஏற்று, காட்சிகளை நீக்கியும், மறுஆய்வு குழுவிடம் செல்லும்படி கூறுகிறார்கள். படத்தை 9-ந் தேதி வெளியிட முடிவு சய்துள்ள நிலையில், வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்கள் என்றும், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சுந்தரேசன், “படத்தை 9-ந் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டு, அதன்பிறகு தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்து, உடனடியாக தணிக்கை செய்து கேட்கிறார்கள். அது எப்படி முடியும்” என்று கூறினார்.
உடனே நீதிபதி பி.டி.ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையையும் அதேநாளைக்கு ஒத்திவைத்தார்.
