திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி நிலைதடுமாறி கண்டெய்னர் லாரியின் அடியில் விழுந்ததால் பரபரப்பு. சத்தம் போட்டு கூச்சலிட்டு கண்டெய்னர் லாரியை நிறுத்தியதால் பின் சக்கரத்தில் சிக்காமல் உயிரை காப்பாற்றிய இளைஞரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் இவரது மனைவி சங்கீதா இந்த தம்பதியினர் தனது இருசக்கர வாகனத்தில் திருத்தணிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் வந்தபோது சாலை உள்ள வேகத்தடையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கிய போது எதிர் பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி வலது புறமாக சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிக்கு அடியில் கணவன், மனைவி இருவரும் விழுந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி கொண்டிருந்த திலீபன் என்ற இளைஞர் சத்தம் போட்டு கூச்சலிட்டு லாரியை நிறுத்தச் சொன்னதால் சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தியதால் லாரியின் பின் சக்கரத்தில் சிக்காமல் கணவன், மனைவி அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து லாரியின் அடியில் சிக்கிய இருவரையும் திலீபன் மற்றும் அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டெய்னர் லாரிக்கு அடியில் விழுந்த கணவன், மனைவியை கூச்சலிட்டு லாரியை நிறுத்தி காப்பாற்றிய திலீபன் என்ற இளைஞரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்













