டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா மாவட்டங்களில், தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
அப்போது, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன், மழை நிலவரம் குறித்து, காணொலி வாயிலாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், மழையால் இதுவரை பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை என்றார்.
24 குடிசை வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும், 16 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள இடங்களில், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் இன்றும் நாளையும், கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், அமைச்சர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
















