தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜால் நாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக கூறினார். மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக திமுக அரசு செலவழித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதிமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத்தொகையை இன்று அனைவருக்கும் ஸ்டாலின் கொடுத்துவருவதாகவும் தெரிவித்த பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல் திமுக அரசு மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருவதாகவும் அவர் விமர்சித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும், அதிமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
















