கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இதுதொடர்பாக த.வெ.க நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோரிடம் ஏற்கெனவே டெல்லியில் விசாரணை நடத்தியுள்ளது. விஜய்க்கு வாகனம் ஒட்டிய ஓட்டுநரிடமும சி,பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்க்கு நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதை ஏற்று, விஜய் நாளை டெல்லி சென்று, சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். இதைத்தொடர்ந்து, விஜய்க்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று த.வெ.க சார்பில் கோரிக்கை விடப்பட்டது. மின்னஞ்சல் மூலம் டெல்லி காவல்துறைக்கு அனுப்பப்பட்ட தகவலை ஏற்று, தேவையான பாதுகாப்பை அளிக்க டெல்லி காவல்துறை முன்வந்துள்ளது.
ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ், விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியேறுவது முதல், அவர் செல்லும் இடங்களில் துணை ராணுவப் படையினரும், டெல்லி காவல்துறையினரும் உரிய பாதகாப்பை அளிப்பார்கள் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

















