தீபாவளி பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் காற்றுமாசு அதிகரித்து, புகை மண்டலமாக காட்சியளித்தன.
பேன்ஸிரக பட்டாசுகள் சென்னையில் அதிகளவில் வெடிக்கப்பட்டதால், இரவில் நகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஒரு சிலருக்கு கண், தொண்டை எரிச்சல், இருமல், ஆஸ்துமா பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் 500 என்ற அளவிற்கு காற்று மாசு ஏற்பட்டிருந்தது. இது சென்னை நகரின் காற்றுமாசு சராசரியைவிட அதிகம் என கூறப்படுகிறது. பேன்ஸிரக பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், பாடி உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தன. காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருப்பதால், புகைமண்டலம் எளிதாக கலைந்து செல்லாமல் அடர்த்தியாக காட்சியளித்தது.
சென்னை மாதவரம், பெரம்பூர், வியாசர்பாடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுமாசு அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான பட்டாசுகள் வெ டிக்கப்பட்டதால், எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பிற நகரங்களிலும் இதே நிலை தான் காணப்பட்டது.
 
			
















