அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு, மிகை ஊதியம் வழங்குவதற்காக, 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், அந்த பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கிட, 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய், பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதேபோல், தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

“சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும், தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம், 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் என்றும், தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version