கனமழை எதிரொலியால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி,புதுச்சேரி,காரைக்காலில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை,மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
